திருமீயச்சூர் மூலவரை பாலாலயம் செய்து வைத்தபோது அப்பர் பெருமான் தரிசனம் செய்து பதிகம் பாடிய தலம். அதனால் 'மீயச்சூர் இளங்கோயில்' என்று பெயர் பெற்றது.
காஷ்யபரின் மனைவியர்களுள் ஒருவரான வினதைக்கு கருடனும், கர்த்துருவும் குறை உடலுடன் அருணனும் பிறந்தனர். கர்த்துரு சிவபெருமானை துதிக்க, அவரும் "அருணன் சூரியனின் ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அவன் ஓட்டுவான் என்றும், அவன் பெயராலேயே சூரிய உதயத்தை 'அருணோதயம்' என்று அழைப்பார்கள்" என்றும் அருளினார். இதைக் கேட்ட சூரியன் குறைபாடுடைய இவன் எப்படி எனது தேரை ஓட்டுவான் என்று ஏளனம் செய்ய, சிவபெருமான் அவனைச் சபித்தார்.
தனது தவறுக்கு வருந்திய சூரியன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்குவதற்கு இத்தலத்திற்கு வந்து சுவாமியையும், அம்பாளையும் யானை மீது எழுந்தருளச் செய்து வழிபட்டு, தமக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொண்டார். அதனால் இத்தலம் 'மீயச்சூர்' என்று பெயர் பெற்றது.
மூலவர் 'சகல புவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று பெரிய வடிவில், நீண்ட பாணத்துடன் காட்சி தருகின்றார். அடிப்பாகம் பத்ம வடிவில் உள்ளது. அம்பாள் 'மின்னும் மேகலையாள்' என்னும் திருநாமத்துடன் காட்சித் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, ஆகியோர் காட்சி தருகின்றனர். இங்குள்ள சண்டேஸ்வரர் நான்கு முகங்களுடன் உள்ளார். காளி தேவி வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|